வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜி.கே.மணி ஆய்வு
ஒகேனக்கல்லில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜி.கே.மணி ஆய்வு செய்தார்.
பென்னாகரம்:
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல், நாடார் கொட்டாய், சத்திரம், ஊட்டமலை, உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ரங்கநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது ஒன்றிய குழுத்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் கெம்புராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் ஜி.கே.மணி கூறுகையில், ஒகேனக்கல்லில் தொடங்கி மேட்டூர் பூம்புகார் வரை மிகப்பெரிய வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் தமிழகத்தின் மிகப்பெரிய சுற்றுலா தலம் ஆகும். சுற்றுலா பயணிகளையும் இப்பகுதி மக்களையும் பாதுகாக்க ஒகேனக்கல்லில் படித்துறையில் இருந்து நீரேற்று நிலையம் வரை பெரிய தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. கடலுக்கு செல்லும் உபரிநீரை தர்மபுரி மாவட்டம் முழுவதற்கும் ஏரி, குளங்களை நிரப்புவதற்கான அரசு உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.