படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்
வேலூரில் அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
வேலூரில் அரசு பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
ஆபத்தான பயணம்
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று மதியம் அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் முன்னே பாகாயம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணரால் தொங்கியபடி பயணம் செய்தனர். இதைப்பார்த்த கலெக்டர் உடனடியாக பஸ்சினை முந்திச் சென்று பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிறுத்தத்தில் பஸ்சினை மறித்தார்.
இதைப்பார்த்த மாணவர்கள் உடனடியாக பஸ்சின் உள்ளே சென்றனர். தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன், பஸ் கண்டக்டக்டர், டிரைவர் ஆகியோரை அழைத்து இதுபோன்று ஆபத்தான முறையில் மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கவனமுடன் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
கலெக்டர் அறிவுரை
இதையடுத்து படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர்கள் 2 பேரை அழைத்து ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. பஸ்சில் இடமில்லை என்றால் அடுத்தபஸ்சில் செல்ல வேண்டும். பஸ்சின் உள்ளே பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் அரசு பஸ்சை மறித்து மேற்கொண்ட நடவடிக்கை அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.