பிளஸ்-2 வகுப்புக்கு உற்சாகமாக வந்த மாணவ, மாணவிகள்

19 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, குமரியில் பிளஸ்-2 வகுப்புகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் பாடம் நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-06-20 16:03 GMT

நாகர்கோவில்:

19 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, குமரியில் பிளஸ்-2 வகுப்புகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் பாடம் நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

பிளஸ்-2 வகுப்பு திறப்பு

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு பிளஸ்-1 மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,230 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 450 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 780 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் உள்ளன. ஏற்கனவே 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வரும் நிலையில் தற்போது பிளஸ்-2 வகுப்பு தொடங்கப்பட்டது.

மாணவர்கள் ஆர்வத்துடன்...

முன்னதாக குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது மற்றும் அதற்கான முன்னேற்பாடு பணி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. 19 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று பிளஸ்-2 வகுப்புகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பள்ளிகளுக்கு வந்தனர்.

பள்ளிகள் திறக்கப்பட்டு 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல், புத்துணர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்