விமானத்தில் கோவை வந்த மாணவ-மாணவிகள்

விமானத்தில் கோவை வந்த மாணவ-மாணவிகள்

Update: 2022-12-17 18:45 GMT

கோவை

சென்னையில் இருந்து ஒரு நாள் சுற்றுலாவாக கோவைக்கு விமானத்தில் வந்த மாணவர்களை கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வரவேற்றனர்.

விமானத்தில் கோவை வந்த மாணவர்கள்

தனியார் சமூக அமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அப்போது அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது தெரியவந்தது. அத்தகை குழந்தைகளின் கனவை நனவாக்க தனியார் சமூக அமைப்பானது, தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வானமே எல்லை என்ற தலைப்பில் ஒரு நாள் சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதற்காக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் மற்றும் திருநங்கை ஒருவர் என 26 பேர் நேற்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.

உற்சாக வரவேற்பு

சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்கிய மாணவ- மாணவிகளை கோவை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவை அறிவியல் மையம், ஜி.டி. நாயுடு அருங்காட்சியகம் மற்றும் உக்கடம் குளக்கரையில் உள்ள ஐ லவ் கோவை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் இரவு மீண்டும் கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் அழைத்து செல்லப்பட்டனர்.

முதல் முறையாக விமானத்தில் பயணித்தது மகிழ்ச்சி

சென்னையில் இருந்து ஒருநாள் சுற்றுலாவாக விமானம் மூலம் கோவை வந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சென்னை மதுரவாயலை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மோகன்:-

நான் பி.ஏ., பி.எட். படித்துள்ளேன். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தேன். விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி. எனக்கு கண் பார்வை இல்லாததால் எனது நண்பர்களிடம் சுற்றி பார்க்கும் இடங்களை கேட்டு தெரிந்து கொண்டேன்.

சென்னை போரூரை சேர்ந்த திருநங்கை மோனிகா (18):- விமானத்தில் பயணம் செய்யும்போது கொஞ்சம் பயமாக தான் இருந்தது. சென்னையில் இருந்து புறப்படும்போது, கோவையில் தரையிறங்கும் போதும் பயம் ஏற்பட்டது. விமானத்தில் பயணம் செய்யும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடன் திரை பிரபலங்களும் பயணம் செய்தனர். அவர்கள் எங்களுடன் விமானத்தில் ஜாலியாக பேசிக்கொண்டு வந்தனர்.

நேதாஜி நகரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் செய்யது முகமது:- விமானத்தில் பயணம் செய்வது எனது கனவாக இருந்தது. அது நினைவாகி உள்ளது. மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். கோவையில் அறிவியல் மையம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தது மகிழ்ச்சி.

சென்னை பெரியபாளையத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி சமீதா:- குளு குளு கோவைக்கு விமானத்தில் வந்தது உற்சாகம் அளித்தது. எங்களை வரவேற்பதற்காக கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அவர்களுக்கு நன்றி.

கல்லூரி மாணவி கீர்த்திகா:- ஒரு நாள் முழுவதும் கோவையில் உள்ள பல இடங்களை சுற்றி பார்த்தது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. தமிழத்தின் முக்கிய நகரமாக விளங்கும் கோவைக்கு விமானத்தில் வந்தது புதுவித நம்பிக்கையை கொடுத்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்