சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி-மயக்கம்
வைப்பூர் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
வேட்டவலம்
வைப்பூர் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
சத்துணவு
வேட்டவலம் அருகே வைப்பூர் ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசினர் உயர்நிலைப் பள்ளிஉள்ளது. இதில் தொடக்கப் பள்ளியில் 63 மாணவர்களும் உயர்நிலைப் பள்ளியில் 90 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் தொடக்கப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் சமைத்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தில் சமைத்த சத்துணவை தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.
வாந்தி-மயக்கம்
இதில் உயர்நிலைப்பள்ளியில் 28 மாணவர்களும், தொடக்கப்பள்ளியில் 16 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருந்தனர்.அப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் தீபக் என்ற மாணவன் சாப்பிட்ட உணவில் பல்லியின் தலை இருந்ததாக கூறினார்.
இதனையடுத்து மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களை சாப்பிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்..
இது குறித்து தகவல் அறிந்த வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுகாதாரக் குழுவினர் விரைந்து சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.
தலைவலி, வயிற்று வலி, வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் இருந்த மாணவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு. வேட்டவலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெற்றோர்கள் முற்றுகை
மேலும் சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளியை மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி சத்துணவு கூடம் மற்றும் மாணவர்களுக்கு சத்துணவு சமைத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு சமையலறை ஆய்வு செய்தார்.
பின்னர் மாணவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.