வாகனங்களில் பாதுகாப்பின்றி பயணம் செய்யும் மாணவர்கள்
வாகனங்களில் பாதுகாப்பின்றி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
பள்ளி வாகனங்கள்
திருச்சி மாநகரில் ஏராளமான தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதில் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச்செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்ற புகாரை தொடர்ந்து, ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட்டது.
அத்துடன் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஆட்டோ, வேனில் ஏற்றக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல விதிமுறைகளை அரசு நடைமுறைப்படுத்தியது. அதன்படி ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வந்தனர். மேலும் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்குப்பதிந்தனர்.
38 வாகனங்களில் குறைபாடு
கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. இதனால் பல பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பல வாகனங்கள் பதிவுச்சான்றையும் புதுப்பிக்கவில்லை. இன்சூரன்சும் புதுப்பிக்கவில்லை. போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் இதுபற்றி கண்டுகொள்ளவே இல்லை.
இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் தொடங்கி 18 நாட்கள் ஆகிறது. கடந்த வாரம் திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் சுமார் 637 வாகனங்களில் 437 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 38 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது.
ஆய்வுக்கே வரவில்லை
ஆனால் சுமார் 200 வாகனங்கள் இன்னும் ஆய்வுக்கே வரவில்லை. இது ஒருபுறம் என்றால் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட மற்ற தனியார் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. பள்ளி மாணவர்கள் ஏற்றிச்செல்லும் தனியார் வாகனங்களில் பல வாகனங்கள் சொந்த பயன்பாட்டுக்கு உரியவையாக இருக்கின்றன.
பல இடங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிச்செல்கின்றனர். நேற்று ஒரு ஆட்டோவில், தனியார் பள்ளி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்சென்றனர். இதனால் இட நெருக்கடியால் டிரைவரின் இருக்கைக்கு அருகே சீட்டின் ஓரத்தில் இருபுறமும் மாணவர்களை அமர வைத்திருந்தனர். ஆபத்தை உணராத அந்த மாணவர்களை பாதுகாப்பற்ற நிலையிலேயே பள்ளியில் கொண்டு விட்டனர். பின்னர் பள்ளியில் இருந்து வீட்டுக்கும் அழைத்து சென்றனர்.
ஆபத்தான பயணம்
கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் ஆட்டோவில் அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்றதாலும், டிரைவர் செல்போன் பேசிக்கொண்டு ஓட்டியதாலும் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எல்.கே.ஜி. படித்து வந்த செல்வநவீன் (வயது 4½) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோரிடையே சோகத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, பதிவுச்சான்று இல்லாமல் உள்ள தனியார் பள்ளி வாகனங்களையும், அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் கார், வேன், ஆட்டோ உள்ளிட்டவற்றையும், பாதுகாப்பற்ற முறையில் அதிக மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.