நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லாததால் மாணவர்கள் அவதி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-05 09:46 GMT

மாணவர்கள் அவதி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பண்ருட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வாரணவாசி மற்றும் குண்ணவாக்கம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். வாரணவாசி, மற்றும் குண்ணவாக்கம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் தடம் எண் 79 நிற்காமல் 100 மீட்டர் தள்ளி போய் நிறுத்தப்படுகின்றது.

இதனால் பள்ளி மாணவர்கள் பஸ்சில் ஏறி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. இதேபோல் மாலையில் 4.20 மணிக்கு பள்ளி விடும் நேரத்தில் வாரணவாசி மற்றும் குண்ணவாக்கம் செல்லும் பள்ளி மாணவர்களை பண்ருட்டி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி ஏற்றி செல்லாமல் பஸ் நிறுத்தத்தை தாண்டி பஸ் நிற்பதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதேபோல் மாநகர பஸ் தடம் எண் 579 குறைந்த அளவிலேயே இந்த பகுதி வழியாக இயக்கப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனால் மாணவ-மாணவிகள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்லும் அவல நிலையும் உள்ளது. குறிப்பாக மாணவிகள் மாலை நேரத்தில் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

கோரிக்கை

இதுகுறித்து பண்ருட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பண்ருட்டி ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனனை சந்தித்து சம்பந்தப்பட்ட பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் 79 நின்று செல்லவும் மாநகர பஸ் 579 பஸ் கூடுதலாக இயக்க வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர் மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் 579 மாநகர பஸ் கூடுதலாக இயக்கவும், அரசு பஸ் 79 சம்பந்தப்பட்ட பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க கோரி மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக கழக இயக்குனர் விழுப்புரம், அரசு பஸ் பொது மேலாளர் காஞ்சீபுரம் ஆகியோருக்கு ஊராட்சி சார்பில் கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டும் பஸ் நிறுத்தத்தில் தடம் எண் 79 அரசு பஸ் நிறுத்தப்படமால் செல்வது தொடர்கதையாகவே உள்ளது. இதேபோல் 579 மாநகர பஸ் கூடுதலாக இயக்கப்படாமலும் உள்ளது.

எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி கூடுதலாக பஸ் இயக்கவும் சம்பந்தப்பட்ட நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்