மழையில் நனைந்து கொண்டு படித்த மாணவர்கள்

சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தால் மழையில் நனைந்து கொண்டு மாணவர்கள் படிக்கின்றனர் என்று வேதனையுடன் பெற்றோர் தெரிவித்தனர்.

Update: 2023-02-02 17:53 GMT

கனமழை

ஆலங்குடி தாலுகா எஸ்.குளவாய்ப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 120 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளி ஆஸ்பெட்டாஸ் சீட் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மேலும் ஆஸ்பெட்டாஸ் சீட் கட்டிடத்தில் ஓட்டை விழுந்துள்ளதால் அதன் மேலே தென்னங்கீற்றுகள் கொண்டு கொட்டகை அமைத்துள்ளனர். மேலும் பள்ளி கட்டிடம் சிதிலமடைந்துள்ளது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் கன மழை ெபய்தது.

புத்தகத்தை தலையில் வைத்து கொண்டு...

அப்போது பள்ளியில் படித்து கொண்டிருந்த மாணவர்கள் மீது மழைநீர் விழுந்தது. மேலும் அவர்களது நோட்டு புத்தகம் எல்லாம் நனைந்தது. மாணவர்ளும் நனைந்தபடியே இருந்தனர். அப்போது மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை தலையில் வைத்து கொண்டு தங்களது மீது மழை துளி விழாமல் பார்த்து கொண்டனர். மேலும் பள்ளியில் தண்ணீர் ஒழுகுகின்றன இடங்களில் பேரல்களை வைத்தும், சாப்பிடும் தட்டுகளை வைத்து தண்ணீரை பிடித்தனர். இதையடுத்து மதியத்திற்கு மேல் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஒரு வகுப்பறையில் மட்டும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் அமர்ந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.

வேதனை

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இப்பள்ளியின் அவலநிலையை போக்க வேண்டும். மேலும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்