ஆதார் எண் கிடைக்காததால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள்
ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் தம்பி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி. இவர்களுடைய மகன்கள் வெற்றிவேல் (வயது 13), சக்திவேல் (12). இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் முறையே 8 மற்றும், 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். தாய் வள்ளி இறந்துவிட்டதால், இவர்கள் 2 பேரும் காப்பகத்தில் தங்கி இருந்து படிக்கின்றனர்.
இவர்கள் 2 பேரும் ஆதார் எண் பெற கடந்த ஓராண்டாக ஆதார் மையம் மற்றும் இ-சேவை மையங்களில் தொடர்ந்து விண்ணப்பம் செய்துள்ளனர். தொழில் நுட்ப கோளாறு, விசாரணையில் நிறுத்தம் என பல்வேறு காரணங்கள் கூறி இதுவரை ஆதார் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மாணவர்கள் இருவரும் தனது பெரியம்மா சுதாவுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்துக்கு நேற்று வந்து கேட்டுள்ளனர். அப்போது ஆதார் மையத்தில் பணிபுரிபவர்கள், 'ஏற்கனவே பதிவு செய்து, தொழில் நுட்ப கோளாறு எனக்கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் பதிய இயலாது' எனக்கூறி அனுப்பினர்.
தர்ணா
இதனால் வேறு வழியில்லாமல் மாணவர்கள் 2 பேரும், தனது பெரியம்மாவுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் மற்றும் அதிகாரிகள் மாணவர்களை ஆதார் மையத்துக்கு அழைத்து சென்று மீண்டும் பதிவு செய்து கொடுக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஆதார் மையத்தில் பதிவு செய்து, இன்னும் ஒரு வாரத்தில் ஆதார் எண் கிடைக்கும் என்று மாணவர்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்து சுதா கூறும்போது, 'மாணவர்கள் காப்பகத்தில் உள்ளதால், ஆதார் பதிவுக்காக ஒவ்வொரு முறையும், சான்றுகள் பெற்று ரூ.1,500-க்கும் மேல் செலவு செய்தும் கிடைக்கவில்லை. இதனால், விடுதியில் தங்குவதற்கான பதிவில், ஆதாரை இணைக்க முடியவில்லை. இவர்களுக்காக அரசு தரும் மானியத்தை பெற, வங்கி கணக்கு தொடங்கவும் முடியவில்லை. தற்போது மீண்டும் பதிவு செய்துள்ளோம். இந்த முறை ஆதார் எண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.