தோல்விகளை வெற்றியின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்து முன்னேற வேண்டும்

தோல்விகளை வெற்றியின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்து கொண்டு முன்னேற வேண்டும் என்று சேலம் அருகே நடந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.

Update: 2022-06-30 20:23 GMT

தோல்விகளை வெற்றியின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்து கொண்டு முன்னேற வேண்டும் என்று சேலம் அருகே நடந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.

கல்லூரி கனவு நிகழ்ச்சி

சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கான உயர்க்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி நேற்று ேசலம் அருகே உடையாப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமையை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), செந்தில்குமார் (தர்மபுரி), எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், அருள், சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

மேல்நிலை பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? என்பதையும் சிறந்த வல்லுனர்கள், கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது.

முன்னேற வேண்டும்

மேலும் மேற்படிப்பு முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் வங்கிக்கடன், உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்களும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

புத்தகம் வெளியீடு

இதையடுத்து மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நான் முதல்வன் "கல்லூரி கனவு" என்ற புத்தகத்தை கலெக்டர் கார்மேகம் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அந்த புத்தகம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்