பொது அறிவு புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும்

பொதுஅறிவு சார்ந்த புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என அரசு என்ஜினீயாிங் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

Update: 2023-09-11 22:21 GMT

நாகர்கோவில்:

பொதுஅறிவு சார்ந்த புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என அரசு என்ஜினீயாிங் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

அரசு என்ஜினீயரிங் கல்லூரி

நாகர்கோவில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. இதையொட்டி நடந்த தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை உபகரணங்களும், கட்டமைப்பு வசதிகளும், சிறந்த முறையில் கல்வி கற்பதற்கான சூழலும் அமைந்துள்ளது.

காலநிலை மாற்றங்கள்

மாணவர்கள் படிக்கும் போது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றை துறை பேராசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி படிப்பை முடித்து கல்லூரி முதலாம் ஆண்டு பயில இருக்கும் மாணவர்களுக்கு தற்போது அடிப்படை பாடங்கள் இருக்கும். 2-ம் ஆண்டும் முதல் துறை சார்ந்த பாடங்கள் நடத்தப்படும். தேர்ந்தெடுக்கும் பாடங்களில் முழு கவனம் செலுத்தி வாழ்வில் உயர்நிலையை எய்திட வேண்டும்.

குறிப்பாக பேரிடர் காலங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை முன்னறிவிக்கும் விதமான கருவிகள், சாலை பாதுகாப்பிற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கிடவும், மீனவர்கள் கடலுக்கு சென்றபின் ஏற்படும் காலநிலை மாற்ற தகவல்களை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையிலான உபகரணங்கள் உள்ளிட்ட உபயோகமான கருவிகளை உருவாக்கிட முன்வர வேண்டும்.

அரசு பணிக்கான தேர்வுகள்

இறுதியாண்டு படிக்கும் போதே மத்திய, மாநில அரசு பணிகளுக்கான தேர்வு, பொது நிறுவனங்கள், மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக நாடுகளில் பணிபுரிவதற்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை ஆங்கில மொழி மற்றும் பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும். மேலும் கல்லூரிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதோடு, தங்களுக்குள்ளே ஒரு குழுவினை உருவாக்கி அனைவரும் இணைந்து செயல்படவேண்டும். மேலும் மாணவர்கள் சுயமாக எந்திரங்கள், உதிரிபாகங்களை தயார் செய்து சந்தைபடுத்தி தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும். தேவைப்படும் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கடன் வழங்க முன்னோடி வங்கி மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் துறை தலைவர் டைட்டஸ், பேராசிரியர் டி.வி.எஸ்.பிள்ளை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்