நீட் விவகாரத்தில் அரசியல் செய்பவர்களின் வலையில் மாணவர்கள் சிக்க வேண்டாம் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

நீட் விவகாரத்தில் அரசியல் செய்பவர்களின் வலையில் மாணவர்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2023-08-21 20:21 GMT

திருமங்கலம், 

நீட் விவகாரத்தில் அரசியல் செய்பவர்களின் வலையில் மாணவர்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேய நத்தம் கிராமத்தில் வீரம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரேமலதா விஜயகாந்த் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை தி.மு.க. குழப்பி வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்கிறார். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறினார்கள். தற்போது வரை ரத்து செய்யவில்லை. உங்களால் முடிந்தால் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஆனால் போராட்டம் நடத்தி மாணவர்களை குழப்பாதீர்கள். நீட் விவகாரத்தில் அரசியல் செய்பவர்களின் வலையில் மாணவர்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

நீட் தேர்வில் கொஞ்சம் பேர்தான் வெற்றி பெறுகிறார்கள். 90 சதவீதம் பேர் தோல்வி அடைகிறார்கள். டாக்டர் படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை. எத்தனையோ படிப்புகள், தொழில்கள் உள்ளன. மாணவர்கள் உறுதியாக இருங்கள். தற்கொலை என்பது எதற்கும் தீர்வு கிடையாது.

கச்சத்தீவு

காங்கிரஸ், தி.மு.க. ஆட்சி காலத்தில் கச்சத்தீவை கோட்டை விட்டனர். இப்போது தி.மு.க.வுக்கும், கச்சத்தீவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கின்றனர். வெறும் வார்த்தைகளால் பேசி மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். கச்சத்தீவை மீட்டுக் கொடுப்பதுதான் மீனவர்களுக்கு செய்யும் உதவி. சென்னையில் பழவேற்காடு பகுதி காட்டுப்பள்ளியில் 100 கிராமங்கள் அழிக்கப்பட உள்ளன. எதற்காக என்றால் அதானி துறைமுக விரிவாக்கத்திற்காக என்கிறார்கள். இதை எதிர்த்து மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே துறைமுக விரிவாக்கத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்