'நீட்' தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம் -அண்ணாமலை பேச்சு
நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம் என நாமக்கல்லில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தை நேற்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தாய்மொழியில் நீட்
தமிழகத்தில் இந்த ஆண்டு சாதனையாக 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும் 18 லட்சம் பேர் எழுத உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் கூடுதலாக நீட் தேர்வு எழுத உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தாய்மொழியில் நீட் தேர்வை எழுதலாம் என அறிவித்ததையடுத்து, இந்த ஆண்டு தமிழ் மொழியில் நீட் தேர்வை 34 ஆயிரத்து 300 பேர் எழுத உள்ளனர்.
சுமை குறைந்துள்ளது
நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அதாவது 2016-ம் ஆண்டுக்கு முன்பு மாணவர்கள் அரசு, தனியார் என தனித்தனியாக மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வுகளை எழுதி பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் கல்வி கட்டணமும் கூடுதலாக இருந்தது.
அவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததால் பெற்றோர் மற்றும் மாணவர்களின் சுமை குறைந்துள்ளது. நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தனியார் கல்லூரியில் சேரும்போது, முதல் 50 இடங்களில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் செலுத்தலாம் என்பதால் ஏராளமான மாணவர்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர்.
70 சதவீதம் தேர்ச்சி
மத்திய அரசு நீட் தேர்வை வெளிப்படையாக நேர்மையாக நடத்துகிறது. நீட் தேர்வு வந்த பின்பு நாடு முழுவதும் பின்தங்கிய மாணவ-மாணவிகள் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ கல்வி பெற்று வருகின்றனர். அனைவருக்குமான சம வாய்ப்பை மத்திய அரசு நீட் தேர்வு மூலம் வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு சரித்திர ஆண்டு. தமிழகத்தில் 58 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். வேறு எந்த மாநிலமும் பெறவில்லை. தமிழகம்தான் முதன்மை மாநிலம். இந்த ஆண்டு மிகப்பெரிய நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கடந்த ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு, நீட் தேர்வை எளிமையாக எதிர் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனால் 58, 65 சதவீதம் எல்லாம் தாண்டி 70 சதவீதமும் தாண்டி உங்களது தேர்ச்சி சதவீதம் சென்று விடும். இந்தியாவுக்கே முன் மாதிரியாக தமிழகம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பயப்பட வேண்டாம்
மாணவர்கள் நீட் தேர்வை கண்டு பயப்பட வேண்டாம். வாழ்க்கை என்பதே பரீட்சை தான். எனவே பல்வேறு தடைகளை தாண்டி வந்த நீங்கள், நீட் தேர்வை எளிதில் அணுகி வெற்றி பெற வேண்டும். ஏழை, எளிய மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமாக உள்ளது. விடா முயற்சியோடு படித்து வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.