மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்; டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
மாணவர்கள் தங்களிடையே உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசினார்.
மாணவர்கள் தங்களிடையே உள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசினார்.
நான் முதல்வன் திட்டம்
காந்தி கல்வி அறக்கட்டளை, சன்பீம் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் தமிழக அரசின் 'நான் முதல்வன் திட்டம்' அறிமுக விழாவும், போதைப் பொருள் இல்லாத தமிழகம் பிரசார நிகழ்ச்சியும் காட்பாடி சன்பீம் பள்ளி வளாகத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் டி.ஜி.பி., சி. சைலேந்திரபாபு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். கல்வி உங்களுக்கு கிடைக்க வேண்டும். நன்றி சொல்வது மனித பண்பு. நன்றியை செயலால் செய்து காண்பிக்க முடியும். நேற்று என்பது முடிந்து விட்ட நாள். நாளை என்பது எப்படி இருக்கும் என தெரியாது. இன்று தான் உங்களுக்கு முக்கியமான நாள். பிறந்தநாள் முக்கியமான நாள். அதேபோல நாம் ஏன் பிறந்தோம் என்பதை உணரும் நாளும் முக்கியமான நாளாகும். உலகம் மிகவும் அழகானது.
ஆற்றலை வெளிக்கொண்டு வர வேண்டும்
உங்களிடையே உள்ள ஆற்றலை நீங்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். உங்களை சக்தி வாய்ந்த மனிதர்களாக மாற்றும் பயிற்சி பிளஸ்-2 வில் கிடைக்கும். நல்ல வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் வரும் காலங்களில் நீங்கள் சிறந்த அதிகாரிகளாக வரலாம். நாடு உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது.
நான் முதல்வன், நான் முதல்வன் என்று சொன்னால் உங்களுக்குள் சக்தி கிடைக்கும். மாணவர்களில் சிலர் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். நான் ஏன் படிக்க வேண்டும்? என உணர்ந்து நீங்கள் படித்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
குழந்தைகளை அனைவரும் படிப்பில் கவனம் செலுத்தி முதல்வனாக திகழ வேண்டும். படிக்கும்போது புரிந்து கொண்டு படிக்க வேண்டும். மனப்பாடம் செய்யக்கூடாது. முதல்வன் என்பது வகுப்பு பாடங்களில் மட்டுமல்லாது, அனைத்துத் துறைகளிலும் நீங்கள் சிறப்பான இடத்தை பெற வேண்டும். இந்த மாவட்டம், நாடு, உலகத்தில் உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத போட்டிகளில் மோதி ஜெயிக்க வேண்டும். அதற்கு 100 சதவீத உழைப்பை செலுத்த வேண்டும்.
போதைப் பொருட்கள் மாணவர்கள் அருகாமையில் இருக்கக் கூடாது என கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு கட்டுப்பாடுகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையிலான போலீசார் எடுத்து வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் போதைப் பொருள் பக்கம் செல்லக்கூடாது. தனி மனித ஒழுக்கம் என்பது சிறப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசுகையில், நானும் போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபுவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்தவர்கள். கடின உழைப்பால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம். இதே போல நீங்களும் உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றார். சன்பீம் பள்ளிகளின் தாளாளர் தங்கப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் வரவேற்றார்.
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தாம்சன், சன்பீம் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் ரத்தீஷ் மற்றும் அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.