மாணவ-மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்

மாணவ-மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்று வேலூரில் நடந்த வானவில் மன்றம் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

Update: 2022-11-28 17:05 GMT

மாணவ-மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்று வேலூரில் நடந்த வானவில் மன்றம் தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

வானவில் மன்றம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வானவில் மன்றம் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதவி கலெக்டர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி வானவில் மன்றத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இடைநிற்றலை தவிர்க்க...

வானவில் மன்றத்தின் நோக்கம் எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதாகும். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம் நம் வாழ்வில் இன்றியமையாதது. இந்த இரு பாடப்பிரிவுகள் தான் உயர்கல்வி படிப்பதற்கு முக்கியமானது.

அறிவியல், கணிதத்தை செயல்முறையில் கற்பிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களிடம் முறையாக சென்று சேரும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். தொடர்ச்சியாக பயிற்சி அளிக்க வேண்டும். தமிழக அரசு கல்வியை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. எனவே மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும். இந்த திட்டங்கள் குறித்து படிப்பை பாதியில் நிறுத்தியவர்களிடம் கூறி அவர்கள் தொடர்ந்து படிக்க வழிவகை செய்ய வேண்டும். கல்வி கற்றால் தான் வெளிச்சமான சமுதாயம் உருவாகும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அறிவியல் கண்காட்சி

தொடர்ந்து பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் மற்றும் அவற்றின் செயல்முறை விளக்கத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் அங்குலட்சுமி, தயாளன், உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்