கும்பகோணத்தில் ஆசிரியர்களுக்கு பரிசு-இனிப்பு வழங்கிய மாணவர்கள்

ஆசிரியர் தினவிழாவையொட்டி கும்பகோணத்தில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசு மற்றும் இனிப்பு வழங்கினர்.

Update: 2023-09-05 20:00 GMT

கும்பகோணம்:

ஆசிரியர் தினவிழாவையொட்டி கும்பகோணத்தில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசு மற்றும் இனிப்பு வழங்கினர்.

ஆசிரியர் தினவிழா

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இனிப்பு வழங்கினர்

இந்த விழாவையொட்டி வகுப்பறைகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாணவ-மாணவிகள், ஆசிரியர்களை வரவேற்று, அவர்களுக்கு இனிப்பு வழங்கினர். சில ஆசிரியர்களை 'கேக்' வெட்ட வைத்து, பின்னர் அவர்களுக்கு மாணவ- மாணவிகள் கேக்கினை ஊட்டி மகிழ்ந்தனர். கரும்பலகையில் ஆசிரியர்களை வாழ்த்தி கவிதை எழுதியிருந்தனர்.

கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தாங்கள் வரைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓவியத்தை பரிசாக வழங்கினார். மாணவர்களின் திறமையை பாராட்டு அவர்களுக்கு பரிசுகளை ஆசிரியர்கள் வழங்கினார்.

கவிதை வாசித்தனர்

சில மாணவர்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிப்பு கொடுத்தனர். மற்ற சில மாணவர்கள் ஆசிரியர்கள் பற்றி கவிதை எழுதி அவர்கள் முன்பு வாசித்து காட்டினர்.

. ஒரு சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர். கும்பகோணத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பள்ளிகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்