இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டாததை கண்டித்து கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை

இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டாததை கண்டித்து கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை நேற்று பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்

Update: 2022-06-30 12:49 GMT

பாவூர்சத்திரம்:

இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டாததை கண்டித்து கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தை நேற்று பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

பழுதடைந்த கட்டிடம் இடிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள பள்ளி கழிவறை கட்டிட தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியானார்கள். இதையடுத்து தமிழகத்தில் உள்ள பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு மீண்டும் புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து மகிழ்வண்ணநாதபுரத்தில் உள்ள யூனியன் தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஒரு வகுப்பறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு பல மாதங்கள் ஆகியும் இ்ன்னும் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.

யூனியன் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் நேற்று காலை வேனில் பாவூர்சத்திரம் வந்தனர். அங்கு கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மீண்டும் கட்டாததை கண்டித்தும், விரையில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

அவர்களிடம் யூனியன் ஆணையாளர் கண்ணன், யூனியன் தலைவி காவேரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 15 நாட்களுக்குள் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக வேனில் அங்கிருந்து அழைத்து சென்றனர். மாணவர்கள், பெற்றோர்களின் இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்