கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் கலைக்கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2023-06-13 16:07 GMT

பிளஸ்-2 முடித்த மாணவர்களின், வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்துவது உயர்கல்வி தான். உயர்ந்த இடத்துக்கு அழைத்து செல்லும் உன்னதமான இந்த உயர்கல்வியை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் வாழ்க்கை பிரகாசிக்கும். இல்லையெனில், வாழ்வு வளம் இழந்து விடும்.

படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய கனவு. அதனை நனவாக்குவதற்கு ஏற்ற படிப்பை தேர்வு செய்வது குறித்து மாணவர்களும், பெற்றோர்களும் பலரிடம் ஆலோசனை கேட்பது உண்டு. பிளஸ்-2 படிப்பை முடித்து கொண்டு கல்லூரிகளில் கால் எடுத்து வைக்கையில் என்ன படிப்பு படிக்கலாம்? எந்தப் பிரிவில் சேர்ந்து படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்? என்பன போன்ற எந்த விவரமும் எல்லா மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிகம் தெரிவது இல்லை.

இதனால் பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் விரும்பும் பாடப்பிரிவில் அல்லது தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்த்து விடுகின்றனர். இந்தநிலையில் எந்தப் பாடப்பிரிவு எடுத்துப் படித்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்பது குறித்து இங்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் கருத்துகள் தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

வேலைவாய்ப்பு அதிகம்

அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ராஜாராம் (திண்டுக்கல்):- கலைக்கல்லூரிகளில் பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், ஐ.டி., பி.காம்., பி.காம். (சிஏ), பி.எஸ்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. எந்த பட்டப்படிப்பை படித்தாலும், எளிதில் வேலை கிடைத்து விடுகிறது. அதேபோல் இன்னும் ஒருசில ஆண்டுகளில் பட்டப்படிப்புகளுக்கு நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உள்ளது. மேலும் தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தில் மாணவ-மாணவிகள் பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேருவதற்கு ஊக்கம் அளிக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மாணவ-மாணவிகள் கலைக்கல்லுரிகளில் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கலைக்கல்லூரியில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தோம் பட்டம் பெற்றோம் என்று இருந்து விடாமல், கணினி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி திறமை, பல்திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். அதன்மூலம் படித்து முடித்த உடனே வேலைக்கு செல்லலாம்.

ஐ.டி. நிறுவனங்களில் வேலை

தனியார் கலைக்கல்லூரி பேராசிரியை சுமதி (திண்டுக்கல்) :- பொறியியல் படிப்புகளை முடிப்பதற்கு 4 ஆண்டுகள் ஆவதோடு, சில லட்சங்கள் செலவாகிவிடும். ஆனால் கலைக்கல்லூரியில் சில ஆயிரம் செலவு செய்தாலே படிப்பை முடித்து விடலாம். இதேபோல் 3-வது ஆண்டிலேயே வளாகத்தேர்வு மூலம் வேலைக்கு சென்றுவிடலாம். மேலும் ஐ.டி. நிறுவனங்களில் பி.எஸ்சி. (ஐ.டி), (சி.எஸ்), பி.சி.ஏ. படித்தவர்களை அதிகம் வேலைக்கு தேர்வு செய்கின்றனர். இவர்கள் ஒருசில ஆண்டுகளில் பொறியியல் பட்டதாரிகளின் சம்பளத்தை தாண்டி விடுகின்றனர். அதேபோல் பட்டப்படிப்பு படித்து விட்டால் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று விடலாம். இதனால் பொறியியல் படிப்புகளின் மீது இருந்த ஆர்வம் கலை படிப்புகளின் மீது ஏற்பட்டுள்ளது. கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகள் பட்டப்படிப்போது, கூடுதல் திறன்களை வளர்த்து கொண்டால் 3-வது ஆண்டிலேயே வேலை கிடைத்து விடும்.

உடனே வேலை

முதலாம் ஆண்டு பி.காம். மாணவர் ஜீவா (குட்டுப்பட்டி) :- கலைக்கல்லூரிகளில் பி.காம். படிப்புகளில் மாணவர்கள் ஆர்வமாக சேருகின்றனர். பி.காம். படித்தால் வணிக நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து விடலாம். அதோடு மார்க்கெட்டிங் துறையில் சாதிக்க முடியும். திறமையாக பணியாற்றினால் நிறுவனத்தில் மேலாளராக ஆகிவிட முடியும். அதேபோல் ஆடிட்டருக்கு படித்தால் உடனே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதனால் பி.காம் படிப்புகளில் சேருவோரின் எண்ணிக்கை அதிகம். பொறியியல் படித்தவர்கள் அதிகரித்து விட்டதால் ரூ.20 ஆயிரம் கூட சம்பளம் கிடைப்பதில்லை. ஆனால் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அந்த சம்பளத்தை எளிதாக வாங்குகின்றனர். எனவே அதிக செலவு செய்து பொறியியல் படிக்க தேவையில்லை.

முதலாம் ஆண்டு பி.காம். மாணவர் ஹரிஹரசுதன் (கணவாய்பட்டி) :- இந்தியாவில் ஒருகாலத்தில் வக்கீல் படிப்பு மிகவும் உயர்ந்ததாக கருதப்பட்டது. அதன்பின்னர் மருத்துவம், பொறியியல், ஆடிட்டர் படிப்புகள் ஆதிக்கம் செலுத்தின. அதில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்ச்சி அவசியம். பொறியியல் படிக்க அதிக செலவாகும் என்பதோடு, வேலை உத்தரவாதம் இல்லை. அதேநேரம் இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஆடிட்டர்கள் தேவை அதிகரித்து இருக்கிறது. அதேபோல் உள்ளூர் நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை ஆடிட்டர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே வணிகவியல் படிப்புகளில் சேருவதன் மூலம் சி.ஏ. படித்து ஆடிட்டர் ஆகிவிடலாம். இதனால் பி.காம் படிப்புகளில் தற்போது மாணவ-மாணவிகள் அதிகமாக சேருகின்றனர். நானும் ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதற்காகவே பி.காம். படிப்பில் சேர்ந்துள்ளேன்.

வேலைவாய்ப்பே காரணம்

குடும்ப தலைவி ராதா (பழனி) :- ஒருகாலத்தில் பொறியியல் படிப்புகளுக்கு தனி மவுசு இருந்தது. ஆனால் பொறியியல் படிப்புகளுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்காததால், அதன்மீதான மோகம் குறைந்து வருகிறது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் சேருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைகிறது. அதேநேரம் கலைக்கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கலைக்கல்லூரிகளில் 3 ஆண்டுகளில் படித்து முடித்து விட்டு வேலைக்கு சென்று விடலாம். பொறியியல் படிப்புக்கு இணையாக கலைக்கல்லூரிகளிலும் படிப்புகள் இருப்பதால், மாணவர்கள் கலைக்கல்லூரிகளில் ஆர்வமாக சேருகின்றனர்.

குடும்ப தலைவி ஜெயலட்சுமி (வேடசந்தூர்) :- இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவ-மாணவிகள் போட்டி போடுகின்றனர். இதனால் பல மாணவ-மாணவிகள் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பொறியியல் படித்தால் ரூ.10 ஆயிரம் தான் சம்பளம் கிடைக்கிறது. அந்த சம்பளத்துக்கு கூட பலருக்கு வேலை கிடைத்தபாடில்லை. இதுதவிர பொறியியல் படித்தவர்கள் டி.என்.பி.சி. தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு சிரமப்படுகின்றனர். ஆனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். எனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். எனது மகளை பொறியியல் படிக்க வைத்து இருக்கிறேன். பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து விட்டதை நினைத்து பயமாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 மடங்கு மாணவர்கள்

கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, 'தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. இந்தநிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த மாதம் 8-ந்தேதி வெளியான நிலையில், அன்றிலிருந்து மே 19-ந்தேதி வரை கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் மூலம் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி 3 லட்சத்து 14 ஆயிரத்து 66 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், இணையதளம் மூலமாகவும் தங்களது தரவரிசையை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 679 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கடந்த மாதம் 5-ந்தேதியில் இருந்து கடந்த 4-ந்தேதி வரை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர காலஅவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பித்த 1 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் கல்லூரிகளை விட, கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 2 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்