புவனகிரி அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் மோதல் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு
புவனகிரி அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் மோதிக் கொண்டனர். அவர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
புவனகிரி,
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பிளஸ்-2 படிக்கும் வடக்கு திட்டை சேர்ந்த மாணவர்களுக்கும், ஆதிவராகநல்லூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்களுக்கும் இடையே கடந்த மாதம் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் இருதரப்பை சேர்ந்த மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிப்புரண்டு சண்டை
இந்த நிலையில் நேற்று மதியம் வடக்கு திட்டை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆதிவராகநத்தத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் திடீரென வடக்கு திட்டை மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த இரு ஊர்களை சேர்ந்த மாணவர்களும் பள்ளி வளாகத்திலேயே மோதிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அவர்கள், கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். ஒருவரையொருவர் கையாலும் தாக்கிக் கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை விலக்கி விட்டனர்.
11 பேர் மீது வழக்கு
இதற்கிடையே இரு ஊர்களை சேர்ந்த மாணவர்களும், புவனகிரி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன் பேரில் ஆதிவராகநத்தத்தை சேர்ந்த 7 மாணவர்கள் மீதும், வடக்கு திட்டையை சேர்ந்த 4 மாணவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.