பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்தார்.

Update: 2022-06-25 19:35 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு, சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கென பள்ளி விடுதிகள் 45 மாணவர்களுக்கும், 19 மாணவிகளுக்கும் மற்றும் கல்லூரி, ஐ.டி.ஐ. விடுதிகளில் 6 மாணவர்களுக்கும், 5 மாணவிகளுக்கும் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்-மாணவிகளும், கல்லூரி, ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவர்-மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ-மாணவிகளும், குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளான, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதிகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்த வரை 31-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும், மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்து கொள்ளப்படும், அவர்களது படிப்பு முடியும் வரை, விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்கப்படும். எனவே மாணவ-மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்