மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்ங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்ட படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் (ஸ்காலர்ஷிப் போர்டல்) புதுப்பித்தலுக்கு கடந்த 10-ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு அடுத்தமாதம் (டிசம்பர்) 15-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் வருகிற ஜனவரி மாதம் 20-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-schemes என்ற இணையதளத்தில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.