பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்

கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

Update: 2023-06-12 16:16 GMT

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை இருமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நேற்றும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மணவிகளுக்கு நாளையும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் தாங்கள் பயிலும் பள்ளிக்கு வந்தனர்.

பழைய நண்பர்களை பார்த்ததும் கைகுலுக்கி, கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். பெரும்பாலான மாணவ-மாணவிகள் வீடு மற்றும் வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்தி விட்டு பள்ளிக்கு வந்தனர். மேலும் கல்வி ஆண்டின் முதல் நாள் என்பதால் ஒருசிலர் பெற்றோருடன் வந்து இருந்தனர்.

உற்சாக வரவேற்பு

6-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவ-மாணவிகளும் தங்களது பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் புதிய வகுப்பறைக்கு அழைத்து செல்லப்பட்டு, அமர வைக்கப்பட்டனர். புதிய வகுப்பறையில் வசதியான இடத்தை பிடிக்க மாணவ-மாணவிகள் இடையே போட்டிபோட்டனர். ஒருசிலர் புதிய வகுப்பறையில் ஒரே பெஞ்சில் அமருவதற்கு பிறரிடம் கெஞ்சிய காட்சிகளும் அரங்கேறின. இந்த கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்பு என்பதால் உற்சாகம் குறையாமல் ஆசிரியர்களும் மாணவர்களுடன் பேசி மகிழ்ந்தனர்.

இதற்கிடையே கோடை விடுமுறையை கொண்டாடிவிட்டு வரும் மாணவ-மாணவிகளை உற்சாகமாக வரவேற்க பல பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மிட்டாய், பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதை வாங்கிய மாணவ-மாணவிகள் புத்தகத்தை திறந்து புதிய பாடங்களை ஆர்வமுடன் பார்த்தனர்.

பரபரப்பான சாலைகள்

கோடை விடுமுறை காரணமாக பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று வாகன போக்குவரத்து அதிகரித்து அனைத்து சாலைகளும் பரபரப்பாக இயங்கின.

குறிப்பாக திண்டுக்கல் சப்-கலெக்டர் அலுவலக சாலை, கச்சேரிதெரு, மேற்குரதவீதி, ஜி.டி.என். சாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்