மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம்

4 ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-12-02 23:08 IST

4 ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர்கள் இடமாற்றம்

வேலூர் கொசப்பேட்டையில் ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் ஆசிரியர்கள் 4 பேர் சமீபத்தில் பணிநிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கு மாணவிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர்கள் திடீர் இடமாற்றத்தால் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கூறினர். மீண்டும் ஆசிரியர்களை அங்கே நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் திடீரென அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாளன், மற்றும் அங்குலட்சுமி ஆகியோர் அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவிகள் 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்