மோட்டார் சைக்கிளில் காரை முந்தி செல்ல முயன்ற போதுலாரி மோதி 2 மாணவர்கள் பலிசேலம் அருகே பரிதாபம்

Update: 2023-06-18 19:59 GMT

சேலம் 

சேலம் அருகே மோட்டார் சைக்கிளில் காரை முந்தி செல்ல முயன்ற போது லாரி மோதி 2 மாணவர்கள் பலியானார்கள்.

10-ம் வகுப்பு மாணவர்கள்

சேலம் வீராணம் அருகே சுக்கம்பட்டி காந்திநகர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் நித்யசாந்தன் (வயது 14). அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் நவீன் (14). இவர்கள் இருவரும் அங்கு உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். மாணவர்கள் இருவரும் நண்பர்கள்.

நித்யசாந்தன், நவீன் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் அயோத்தியாப்பட்டணம் சென்றனர். மோட்டார் சைக்கிளை நித்யசாந்தன் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பரிதாப சாவு

அரூர் மெயின் ரோடு தேவாங்கர் காலனி அருகே வந்த போது முன்னால் சென்ற காரை அவர்கள் முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நித்யசாந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். நவீன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வீராணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் மாணவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நவீன் சிறிது நேரத்தில் இறந்தார்.

கதறி அழுத பெற்றோர்

இறந்த மாணவர்களின் உடல்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான 2 மாணவர்களின் உடல்களை பார்த்து இருவரின் பெற்றோரும் கதறி அழுத சம்பவம் ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்