மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து
மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. ெபாதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீதம் ேதர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து கலெக்டர், ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
அதிக கவனம்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம்:- 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்கு உறுதுணையாக இருந்த பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அறிவுரைகளை முறையாக பின்பற்றியதால்தான் முதலிடம் பிடிக்க முடிந்தது. ஏற்கனவே வெளியான பிளஸ்-2 பொதுத் தேர்வில் முடிவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சென்றது. மேலும் கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டில் 11-ம் இடத்துக்கு சென்றுள்ளது. 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பிளஸ்-1 வகுப்புக்கு குறைவாக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
அடுத்த ஆண்டும்...
வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்:- 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்ததால், ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அடுத்த ஆண்டும் தொடர்ந்து முதலிடம் பெற இப்போது இருந்தே தயாராவோம்.
பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை மரகதம்:- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். முதலிடம் பெற பள்ளிக்கல்வி துறையினர், ஆசிரியர்கள் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்கள். தேர்வு எழுத செல்வதற்கு முன்பு கூட மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆர்வமுடன் பாடங்களை கற்பித்தனர். இதனால் இந்த சாதனை படைக்க முடிந்தது.
ஆர்வத்துடன் படித்ததால் சாதனை
பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி மேகனா:- பெரம்பலூர் மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற மாவட்ட கலெக்டரும், பள்ளி முதன்மை கல்வி அலுவலரும், பள்ளிக்கல்வித்துறையினரும், ஆசிரியர்களும் உழைத்துள்ளனர். என்னை போன்று மாணவ-மாணவிகளும் ஆர்வத்துடன் படித்ததால் இந்த சாதனை படைக்க முடிந்தது. ஏற்கனவே கலெக்டர் மாணவ-மாணவிகளுக்கு முன்னுதாரமாக விளங்குகிறார். 'நீட்' தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புக்கு வந்து மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை நடத்தினார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ்:- ஆசிரியர்கள் எங்களுக்கு நன்றாக பாடங்களை நடத்தினார்கள். எங்களுக்கு எழும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைத்தனர். அடிக்கடி தேர்வு வைத்து எங்களின் படிப்பின் மீதான கவனத்தை கண்காணித்தனர். இதனால் தான் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற முடிந்தது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக...
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவஜ்ரகயாவின் தந்தை குணசேகரன்:- எனது 3 மகன்களும் அரசு பள்ளியில் படித்து சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நன்றாக கற்பிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் திகழ்ந்து வருகிறது. அரசும் மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் படிப்புக்கு மாவட்ட நிர்வாகம் முக்கியவத்தும் கொடுத்ததினால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.