பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்; ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள்

.இதுபற்றி ஆசிரியர்கள், கல்வியாளர், பஸ் டிரைவரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

Update: 2023-02-24 18:45 GMT

படியில் பயணம், நொடியில் மரணம் என்ற வாசகம் பஸ்களில் இடம்பெற்று இருக்கும். ஏதோ கடமைக்கு எழுதப்பட்ட வாசகம் அல்ல அது. எச்சரிக்கை விடுக்கும் அந்த வாசகத்தை, இளைஞர்கள் எளிதாக எடுத்துக் கொள்வதுதான் வேதனையாக இருக்கிறது. இளம் கன்றுகள் பயம் அறியாது என்பது என்னவோ உண்மைதான். அதிலும் படித்தவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் விளையாட்டு பிள்ளைகளாக நடந்து கொள்வதுதான் வேதனையிலும் வேதனை.

சென்னையை பொறுத்தவரையில், மாநகர பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து, ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் இளைஞர்களை நித்தமும் காண முடியும்.

ஒருபுறம் பஸ் பற்றாக்குறையால் இப்படி அவர்கள் செல்வதாகக் கூறினாலும், பெரும்பாலான பஸ்களில் கூட்டம் இல்லாமல் இருந்தாலும், படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வழக்கத்தைதான் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். அதிலும் சில மாணவர்கள் பஸ் ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு காலை தரையில் தேய்த்து 'ஸ்கேட்டிங்' செய்யும் விபரீத விளையாட்டையும் மேற்கொள்கின்றனர்.

சாகச பயணம்

படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால்தான், அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ? கதாநாயகன் என்ற மிதப்பில் இவ்வாறு சாகசப் பயணம் செய்கின்றனர்.

அவர்களின் அத்துமீறல்கள் பார்ப்பவர்களை பதற வைப்பதுடன், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும்கூட அச்சப்படச் செய்கின்றன.

அதுமட்டுமா? குழுவாக சேர்ந்து பாடுவது, தாளம் போடுவது, பஸ் மேற்கூரையின் மீது ஏறி ஆட்டம் போடுவது போன்ற பொறுப்பற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

இதில் அந்த பஸ்சை இயக்கும் டிரைவர், கண்டக்டரின் நிலைதான் பரிதாபம். 'இவர்களிடத்தில் வாக்கப்பட்டு நாங்கள் படும் கஷ்டத்தை என்ன சொல்வது?' என்பதே அவர்களின் வேதனையாக வெளிப்படுகிறது.

பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும், அவர்களின் போக்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது? அவர்களின் இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்பன பற்றி ஆசிரியர்கள், கல்வியாளர், பஸ் டிரைவரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

இலவச பயண அட்டை ரத்து

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், 'மாணவர்களுக்கு இலவச பயண சலுகை கொடுப்பது பாராட்டுக்குரியது. ஆனால் அதனை பெற்றுக்கொண்டு படிக்கட்டில் தேவையில்லாமல் தொங்கியபடி செல்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கான இலவச பயண அட்டையை ரத்து செய்ய வேண்டும். படிக்கட்டில் பயணம் செய்ய பஸ் டிரைவர், கண்டக்டர் அனுமதிக்கக்கூடாது. பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் பயணிக்கும் நேரங்களில் கூடுதலாக பஸ் சேவைகளை வழங்கலாம். அவ்வாறு செய்தால், மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். பஸ் படிக்கட்டு பயணம் குறித்த வாசகங்களை பஸ்களில் பெரிய அளவில் இடம்பெறச் செய்யவேண்டும். மற்ற விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட இது அவசியமானது. சமூக வலைதளங்களில் இதுபற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படுத்தலாம். இதையெல்லாம் செய்தால், படிக்கட்டு பயணம் குறையும்' என்றார்.

ஆபத்தை உணருவது இல்லை

நாமக்கல் அரசு போக்குவரத்து கழக அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது:-

பஸ்களில் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் படிகளில் தொங்கி செல்லவதை ஸ்டைலாக நினைக்கின்றனர். அதில் இருக்கும் ஆபத்தை உணருவது இல்லை. பெற்றோருக்காகவும், சமூகத்துக்காகவும் தனது எதிர்கால வாழ்க்கையின் பொறுப்பும் கடமையும் உள்ளது என்று உணர்வதில்லை.

சமூகப் பொறுப்பு இன்றைய இளைஞர்களுக்கு வேண்டும். இவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். காவல் துறை அதிகாரிகள் காலை, மாலை நேரங்களில் படிகளில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்து தடுக்க வேண்டும். கண்டக்டர்களுக்கு உதவியாக உள்ளே போங்கங்கள் என்று நடு வண்டியில் நிற்பவர்களை கேட்டு, அவர்கள் கொஞ்சம் நகர்ந்தால் கூட நீங்கள் (மாணவர்கள்) படியில் தொங்க வேண்டிய அவசியம் இருக்காது.இதேபோல் மாணவர்களின் பெற்றோர்களும், அவர்களுக்கு புத்திமதி சொல்லி நல்வழிபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் நிகழாமல் இருக்க போக்குவரத்து துறைக்கும், அரசு நிர்வாகத்திற்கும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

உயிரை இழக்க நேரிடும்

நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணன்:-

எங்கள் பள்ளியை பொறுத்த வரையில் மாணவர்களுக்கு படிகளில் தொங்கிச் செல்லக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இளம் கன்று பயம் அறியாது என்று சொல்வதை போல இவ்வாறு பயணிப்பது ஒரு கதாநாயக பிம்பத்தை ஏற்படுத்தித் தரும் என அவர்கள் நினைக்கிறார்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யும் இந்த செயலானது விபரீதத்தில் தான் போய் முடியும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமாயின் விலையற்ற உயிரையே இழக்க நேரிடும்.

எனவே ஆபத்தான முறையில் படியில் நின்று கொண்டும், தொங்கிக் கொண்டும் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதையெல்லாம் தொடர்ந்து பிரார்த்தனை கூட்டத்திலும், மற்ற நேரங்களிலும் எங்களுடைய ஆசிரிய பெருமக்கள் மாணவர்களுக்கு வலியுறுத்தி வருகின்றோம். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, அலுவலகம் செல்வோர் வசதியாக சென்று வர கூடுதலாக பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும். இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். எனவே போக்குவரத்து துறை இதில் கவனம் செலுத்தி, கூடுதல் பஸ்களை இயக்கிட வழிவகை செய்திட வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

மோகனூர் அருகே உள்ள அணியாபுரத்தை சேர்ந்த சுதாகர்:-

தமிழக அரசு இலவச பஸ் பயண அட்டை வழங்குகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பிரதான பொது போக்குவரத்தாக டவுன் பஸ்கள் இருந்து வருகின்றன. பஸ் சேவைகள் குறைவாக இருக்கும் வழித்தடங்களில் படிக்கட்டு பயணம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இது ஆபத்தான ஒன்று. டிரைவரோ, கண்டக்டரோ, பொது மக்களோ மாணவர்களை கண்டிக்க முடியாது. போலீசார் அல்லது பள்ளிக்கூட நிர்வாகமோ, போக்குவரத்து கழகங்களோ இவர்களை தடுக்கலாம். தவிர்க்க முடியாமல் பயணிப்பவர்களை தவிர, வேண்டுமென்றே படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களின் இலவச பயண அட்டையை ரத்து செய்யலாம். பள்ளிகளில் போலீசார் இது பற்றிய விழிப்புணர்வை நேரடியாக வந்து ஏற்படுத்தலாம்.

கனவு சிதைந்து விடும்

திருச்செங்கோட்டை சேர்ந்த கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன்:-

கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் குழுவாக சேரும்போதுதான் அவர்கள் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். தன்மீது கவன ஈர்ப்பு வர வேண்டும் என்று நினைத்து இதுபோன்ற வீரசெயல்களை செய்கிறார்கள். எனவே இந்த செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. படிக்கட்டில் தொங்குவது மட்டுமல்லாமல் மற்ற பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி பயணம் செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வும், ஆலோசனையும் வழங்குவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் போது விபத்தில் சிக்கினால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். இந்த பாதிப்பு அவர்களின் பெற்றோர் கனவை சிதைத்து விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்