நெல்லையில் கின்னஸ் சாதனைக்காக 108 விநாயகர் ஓவியம் வரைந்த மாணவி
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி நேற்று வரை 108 ஓவியங்களை வரைந்து சாதனை புரிந்துள்ளார்.
நெல்லை:
நெல்லை சிவராம் கலைக்கூடம் மாணவி ஸ்ரீநிதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு 108 விநாயகரை ஓவியமாக வரைந்து உள்ளார். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி நேற்று வரை 108 ஓவியங்களை வரைந்து சாதனை புரிந்துள்ளார்.
இந்த ஓவியங்கள் அனைத்தும் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் வரைந்த பலவிதமான விநாயகர் ஓவியங்கள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான நிகழ்ச்சி இன்று காலை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. மாவட்ட அருங்காட்சியக காப்பாளர் சிவசத்தியவள்ளி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். ராமசேஷய்யர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லகட்சுமண பாரதி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியர் கணேசன் மற்றும் ஓவிய பயிற்சி மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகுமார் -வித்யா லட்சுமி நன்றி கூறினர்.
இந்த ஓவியங்கள் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகிறது.