நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கையால் கல்லூரி படிப்பை தொடர்ந்த மாணவர்
நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கையால் மாணவர் ஒருவர் கல்லூரி படிப்பை தொடர்ந்து உள்ளார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி வடக்கு புதுத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து (வயது 19). இவர் கடந்த மே மாதம் 22-ந்தேதி நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், 'கடந்த 2021-ம் ஆண்டு பிளஸ்-2 படிப்பை முடித்து, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 வருட இ.இ.இ பாடப்பிரிவில் சேர்ந்தேன். கல்லூரி சேர்க்கையின்போது கல்வி கட்டணம் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 சான்றிதழ்களை கொடுத்து சேர்ந்தேன். கல்லூரியில் ஓராண்டு மட்டும் படித்தேன். அதன்பிறகு குடும்ப சூழ்நிலை, கட்டணம் பிரச்சினையால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அசல் சான்றிதழ்களை திரும்ப கேட்டபோது, ஓராண்டு கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கூறிவிட்டனர். எனவே எனது அசல் சான்றிதழ்களை பெற்றுத்தர வேண்டும்' என்று கூறிஇருந்தார்.
நீதிபதி சமீனா, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரி சார்பில், உயர் கல்வித்துறை, ஆதிதிராவிடர்-பழங்குடியினர் துறை வழங்கும் முதலாம் ஆண்டு கல்வி உதவித்தொகை ரூ.35 ஆயிரம் மாணவரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. அதில் அவர் ரூ.15 ஆயிரத்தை மட்டுமே கல்வி கட்டணமாக செலுத்தினார். மீதி தொகையை செலுத்தாமலும், கல்லூரிக்கு வராமலும் படிப்பை நிறுத்தி விடடார். எனவே மீதி தொகையை செலுத்திவிட்டால் அசல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இசக்கிமுத்து நடப்பு கல்வி ஆண்டில் தனது படிப்பை தொடருவதாகவும், முதல் ஆண்டுக்கான கல்வி கட்டண பாக்கித்தொகையை செலுத்துவதாகவும், அரசு உதவித்தொகையில் தொடர்ந்து படிப்பதாகவும் தெரிவித்தார். அப்போது கல்லூரி சார்பில் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.