பனவடலிசத்திரம் அருகே 10-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை- தேர்வில் தோல்வி பயத்தால் பரிதாப முடிவு

பனவடலிசத்திரம் அருகே, 10-ம் வகுப்பு மாணவர் தேர்வில் தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-06-16 14:39 GMT

பனவடலிசத்திரம்:

10-ம் வகுப்பு மாணவர் தேர்வில் தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இந்த தம்பதிக்கு பிரபாகரன் (வயது 15), முத்துராஜ், மனோஜ் ஆகிய மகன்கள் இருந்தனர்.

இதில், பிரபாகரன் பனவடலிசத்திரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்கொலை

பிரபாகரன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இந்த தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. ஆனால் தேர்வு எழுதிய பிரபாகரன் பயத்தில் இருந்தார். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் அவரை வாட்டியது.

இந்தநிலையில் பிரபாகரன் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய வீட்டினர் பிரபாகரனை தேடிப்பார்த்தனர். அப்போது ஆராய்ச்சிபட்டியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்ததும் பனவடலிசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்தார்.

பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்