மதுரையில் டியூசனுக்கு அழைத்து மாணவருக்கு பாலியல் தொல்லை; அர்ச்சகர் கைது

டியூசன் சொல்லி கொடுப்பதாக மாணவரை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-27 01:13 IST


கோவில் அர்ச்சகர்

மதுரை ஊமச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் தமுக்கம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 6 மாதங்களாக தற்காலிக அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். மேலும் கோவிலுக்கு வந்து செல்வதற்காக தல்லாகுளம் பகுதியிலேயே ஒரு அறை எடுத்து தங்கி கோவில் பணிக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் கோவிலுக்கு 11-ம் வகுப்பு மாணவர் சாமி கும்பிட வந்துள்ளார்.

அவர் அடிக்கடி வந்து சென்றதால் அர்ச்சகர் கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது கண்ணன், தான் பி.காம். படித்துள்ளதால் படிப்பில் எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்குமாறு கூறியுள்ளார். அதை நம்பி மாணவரும் அர்ச்சகரிடம் தனக்கு படிப்பில் உள்ள சந்தேகத்தை கேட்டு வந்துள்ளார். இதற்கிடையில் அர்ச்சகர் மாணவருக்கு இலவசமாக டியூசன் எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறு கூறினார்.

போக்சோவில் கைது

மாணவரும் அவர் தெரிவித்தப்படி சம்பவத்தன்று இரவு டியூசனுக்கு சென்றார். அங்கு மாணவரை சிறிது நேரம் படித்து கொண்டிருக்குமாறு கூறி விட்டு அர்ச்சகர் வெளியே சென்றார். பின்னர் அவர் அறைக்கு வந்த போது மாணவர் தூங்கி விட்டார். அந்த நேரத்தில் அர்ச்சகர் கண்ணன் அந்த மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த மாணவர் அங்கிருந்த தப்பி வீட்டிற்கு வந்தார். அங்கு நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே மாணவரின் பெற்றோர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அர்ச்சகர் கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அர்ச்சகர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்