சினிமாவில் நடிக்க வைப்பதாக மாணவி பலாத்காரம்: தலைமறைவாக இருந்த தயாரிப்பாளர் சிக்கினார்

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-04 20:46 GMT

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்னையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரில், எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தேன். அப்போது முகநூலில், டி.என். 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதை பார்த்தேன்.

இதையடுத்து அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியில் நடிகைகள் தேர்வு நடப்பதை அறிந்து அங்கு சென்றேன். விடுதியில் இருந்த கரூரை சேர்ந்த பார்த்தீபன் (வயது 30) என்பவர் தன்னை படத்தின் தயாரிப்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

தயாரிப்பாளர் கைது

மேலும் அவர் என்னை படத்தின் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதேபோன்று பலமுறை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் அவர் கூறியபடி செய்யாமல் ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின்பேரில் மகளிர் போலீசார் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பார்த்தீபன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பார்த்தீபனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்