ஆட்டோமீது மோட்டார் சைக்கிள் மோதி மாணவர் பலி

குடியாத்தம் அருகே கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்கசென்ற மாணவர் விபத்தில் பலியானார்.

Update: 2023-05-30 18:37 GMT

விண்ணப்பம் வாங்க...

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுஹேல்அகமது. தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் நபில்அகமது (வயது 18). வளத்தூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலையில் மாணவன் நபில்அகமது குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் நோக்கி சென்றுள்ளார். குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் அருகே சென்ற போது எதிரே வந்த ஆட்டோ திடீரென திரும்பி உள்ளது.

விபத்தில் பலி

இதனால் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி உள்ளது. இதில் நபில்அகமது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டு ராமு உள்ளிட்ட போலீசார் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக மாணவன் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆட்டோ டிரைவர் பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த செல்வம் (52) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்க சென்ற மாணவன் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்