காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி பலி; காப்பாற்ற முயன்ற தாயும் சாவு

பெட்டவாய்த்தலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி பலியானாள். அவரை காப்பாற்ற முயன்ற தாயும் இறந்தார். கைகளை பிடித்தபடி இருவரும் இறந்து கிடந்தது பொதுமக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-20 14:04 GMT

ஜீயபுரம், ஆக.21-

பெட்டவாய்த்தலை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மாணவி பலியானாள். அவரை காப்பாற்ற முயன்ற தாயும் இறந்தார். கைகளை பிடித்தபடி இருவரும் இறந்து கிடந்தது பொதுமக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூலித்தொழிலாளி

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமணி மலையப்ப நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 33). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு மகேஸ்வரி (31) என்ற மனைவியும், அட்சயா (15), கனிஷ்கா (10) என்ற மகள்களும், பிரேம் (12) என்ற மகனும் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மகேஸ்வரி தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இதில் கனிஷ்கா சர்க்கார்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். பிரேம் மற்றும் அட்சயா ஆகிய இருவரும் தாயுடன் தங்கி திருப்பராயத்துறையில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

ஆற்றுக்கு குளிக்க சென்றனர்

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் கனிஷ்கா பாட்டி வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு வந்து இருந்தாள். இதைத்தொடர்ந்து மகேஸ்வரி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்குள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார்.

குழந்தைகளை கரையோரம் நின்று குளிக்க சொல்லிவிட்டு மகேஸ்வரி துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். 3 பேரும் மகிழ்ச்சியுடன் ஆற்றில் குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மாணவி கனிஷ்கா தண்ணீரில் விளையாடியபடியே ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் கனிஷ்கா தண்ணீரில் மூழ்கியவாறு தத்தளிக்கவே, அதைப்பார்த்த மற்ற 2 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். பிள்ளைகள் சத்தம் போடுவதை கேட்ட தாய் மகேஸ்வரி, தண்ணீரில் ஆழமான பகுதியில் கனிஷ்கா மூழ்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார். பின்னர் அவரும் ஆற்றுக்குள் சென்று மகளை காப்பாற்ற முயன்றார்.

தாய்-மகள் சாவு

மகளை கட்டியணைத்தபடி பிடித்தபோது, அவரும் துரதிர்ஷ்டவசமாக தண்ணீரில் மூழ்கினார்.

தாயும், தங்கையும் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த மற்ற 2 பேரும் சத்தம்போட்டபடி கதறி அழுதனர். இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர்.

தொடர்ந்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையம், பெட்டவாய்த்தலை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொது மக்களுடன் சேர்ந்து தாயையும், மகளையும் தேடினர். சிறிது நேர தேடலுக்கு பின்னர் மகேஸ்வரியும், கனிஷ்காவும் பிணமாக மீட்கப்பட்டனர்.

உருக்கம்

அப்போது, மகேஸ்வரி தனது குழந்தை கனிஷ்காவின் கையை இறுகப் பிடித்தவாறு இறந்து கிடந்தது அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இன்னொரு பக்கம் மற்ற 2 பிள்ளைகளும் ஆற்றங்கரை மணலில் தாய், தங்கையின் உடல் அருகே உருண்டு, புரண்டு அழுதது அங்கு சூழ்ந்து இருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மகன், மகள்களுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்