கோவில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
ஓசூரில் நண்பர்களுடன் குளித்த போது கோவில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
ஓசூர்:
ஓசூரில் நண்பர்களுடன் குளித்த போது கோவில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பள்ளி மாணவன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கணபதி நகரை சேர்ந்தவர் பத்மநாதன். லாரி டிரைவர். இவரது மகன் திருப்பதி (வயது 13). இவன், ஓசூர் அருகே அந்திவாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மாணவன் அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 2 பேருடன் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றான்.
பின்னர் நண்பர்கள் 3 பேரும் ஓசூர் ஏரித்தெரு அருகே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் குளிக்க சென்றனர். அங்கு அவர்கள் 3 பேரும் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது, திருப்பதி எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கினான். இதைக் கண்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
உடல் மீட்பு
இவர்களின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் குளத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர் குளத்தில் இறங்கி சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் மாணவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.