மாணவி குளத்தில் பிணமாக மீட்பு

அருமனை அருகே வீட்டு முன்பு விளையாடிய 2-ம் வகுப்பு மாணவி குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-07-23 18:45 GMT

அருமனை, 

அருமனை அருகே வீட்டு முன்பு விளையாடிய 2-ம் வகுப்பு மாணவி குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2-ம் வகுப்பு மாணவி

அருமனை அருகே கடையாலுமூடு போங்கின்காலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், கூலிதொழிலாளி. இவருடைய மகள் பினுஷியா இம்மாலின் (வயது 7). இந்த சிறுமி 1½ வயதிலிருந்தே நோய் வாய்ப்பட்டு மனநலம் குன்றியவராக காணப்பட்டாள். இதையொட்டி சிறப்பு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் சிறுமி பினுஷியா இம்மாலின் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கடந்து தாயார் சிறுமியை தேடியபோது அவளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார், மகளை குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தார். அப்போது அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர், சிறுமி சிறிது நேரத்திற்கு முன்பு வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையில் நின்றதை கண்டதாக கூறினார்.

பரிதாப சாவு

உடனே தாயார் பதறியடித்து கொண்டு குளத்திற்கு ஓடி சென்றார். அங்கு சிறுமி தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தாள். அவளை தண்ணீரில் இருந்து மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடையால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விளையாடி கொண்டிருந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையில் சென்ற போது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கடையால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளத்தில் தவறி விழுந்து 2-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்