நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை முயற்சி
கோவையில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
கோவையில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நர்சிங் மாணவி
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் மனிஷா (வயது 18). இவர் கோவை போத்தனூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
மருத்துவராக வேண்டும் என்பது இவருடைய கனவாகும். இதற்காக கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு அவர் தேர்வை எழுதினார். அதில் அவர் போதிய மதிப்பெண் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து மனிஷாவுக்கு நர்சிங் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் நர்சிங் படித்துக்கொண்டே மீண்டும் நீட் தேர்வை எழுத தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு வந்தார்.
தற்கொலைக்கு முயற்சி
தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு அவர் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. மனிஷாவுக்கு நெல்லை மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு தயாராகி மனிஷா, இந்த முறையும் தனக்கு நல்ல மதிப்பெண் கிடைக்குமா? மருத்துவராகும் கனவு நிறைவேறுமா? என மிகுந்த மன குழப்பத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் நீட் தேர்வு குறித்து ஏற்பட்ட பயம் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விடுதியில் இருந்த மாணவி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவருடைய கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அவர் வலியால் துடித்தாா்.
பரபரப்பு
சத்தம் கேட்டு எழுந்த சக மாணவிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவியை மீட்டு, கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வுக்கு பயந்து நர்சிங் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, தற்கொலைக்கு முயன்ற மாணவி பிளேடால் கையை அறுக்கும்போது தோல் பகுதியில் மட்டுமே பிளேடு வெட்டுபட்டு உள்ளது. அவர் சிகிச்சை பெற்று விடுதிக்கு திரும்பினார்.
இதனால் அவருடைய உயிருக்கு பொிதும் பாதிப்பு இல்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.