ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வழக்கில் மாணவர் கைது

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வழக்கில் மாணவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-22 12:46 IST

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது அங்குவந்த வாலிபர் ஒருவர், மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி கூறினார். அதற்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த மதுரை கல்லூரி மாணவர் வசந்த்(19) என்பவரை கைது செய்தனர். போலீசாரிடம் வசந்த அளித்த வாக்குமூலம் வருமாறு:-

கல்லூரி மாணவியுடன் எனக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. என்னுடன் நன்றாக பழகி வந்த மாணவியிடம், நான் எனது காதலை தெரிவித்தேன். அதன்பிறகு அவர் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனாலும் கடந்த ஒரு வருடமாக மாணவியின் பின்னால் சுற்றியும் என்னை காதலிக்க மறுத்ததுடன், போலீசில் புகார் செய்வதாகவும் கூறினார். இதனால் மதுரையில் இருந்து கத்தியை வாங்கி வந்தேன். மேடவாக்கம் பஸ் நிலையத்தில் நின்ற மாணவியிடம் என்னை காதலிக்கும்படி மீண்டும் வலியுறுத்தினேன். ஆனால் அவர் காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்