அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
நெல்லையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அங்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நாடகத்தையும் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்ட தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் யூனியன், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்த்து படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலங்கள், இல்லம் தேடி சென்று பெற்றோரை சந்தித்தல், தமிழக அரசின் கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் படித்தால் இலவச கல்வி, உயர் கல்வி, இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு பயிற்சி போன்ற நன்மைகளை விளக்கும் விதமாக இந்த ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 5 வயதுக்கு உட்பட்ட 5,521 குழந்தைகளும், 6-ம் வகுப்புக்கு 4,564 மாணவர்கள், 9-ம் வகுப்புக்கு 5,651 மாணவர்கள், பிளஸ்-1 வகுப்புக்கு 6,793 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து பயன் அடைவார்கள்.
அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் காலையில் சிற்றுண்டி வழங்குதல், மாணவர்களின் தனித்திறமையை வளர்க்க பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல், நீட், ஐ.ஐ.டி., டிரஸ்ட், என்.டி.எஸ்.இ போன்ற தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அளித்தல், அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் படித்தவர்களுக்கு உயர் கல்வி படிக்க 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குதல், 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் அரசு பணிக்கு இடஒதுக்கீடு வழங்குதல் போன்ற முக்கிய சிறப்பு அம்சங்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வண்ணார்பேட்டை, புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் பொதுமக்களை சந்தித்து தமிழக அரசின் கல்வி திட்டங்களை எடுத்துக்கூறி துண்டுபிரசுரங்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் ஜான் போஸ்கோ மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.