நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.;
தர்மபுரி:
கூட்டுறவு சங்கங்களின் தர்மபுரி மண்டல இணைப்பதிவாளர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மொரப்பூரில் செயல்படும் தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022- 2023- ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடு மற்றும் அதன் நுட்பங்கள் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை, தங்கத்தை கணக்கிடும் முறை, தங்கத்தை உரசியும் உரசாமலும் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நகை கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை முடித்தவர்கள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியலாம். நகைக்கடை, நகை அடகு கடை ஆகியவற்றில் பணிபுரியவும் நகை வணிகத்தில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இந்த பயிற்சியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பயிற்சியில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.