வாசிப்பு போட்டியில் மாணவர்கள் சாதனை

மாவட்டத்தில் வாசிப்பு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-06-20 19:48 GMT

மாவட்டத்தில் வாசிப்பு போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மாணவர்கள் சாதனை

விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறையிலும் கற்றல் இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரீடிங் மாரத்தான் என்ற நிகழ்ச்சியை செயலி மூலம் கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் உள்ள 82,929 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 3 கோடியே 61 லட்சத்து 73 ஆயிரத்து 401 வார்த்தைகளை சரியாக வாசித்து உள்ளனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் வைத்தியலிங்கபுரம் பழனி தொடக்கப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவர் சிவ மகேஸ்வரன் 9 லட்சத்து 879 ஸ்டார்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். வெம்பக்கோட்டை யூனியன் நரிக்குடி யூனியன் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி நல்லம்மா 9 லட்சத்து 604 ஸ்டார்கள் பெற்று 2-வது இடம் பெற்றார். சிவகாசி ஏழாயிரம்பண்ணை யூனியன் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் குமரன் 5 லட்சத்து 325 ஸ்டார்கள் பெற்று 3-வது இடம் பெற்றார்.

பாராட்டு

ஒன்றிய அளவில் நரிக்குடி ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்கள் 1 லட்சத்து 50 ஆயிரத்து 319 நிமிடங்கள் 63 லட்சத்து 46 ஆயிரத்து 374 வார்த்தைகளை வாசித்து முதலிடம் பெற்றுள்ளனர். ராஜபாளையம் யூனியனை சேர்ந்த மாணவர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 907 நிமிடங்களில் 52 லட்சத்து 23 ஆயிரத்து 796 வார்த்தைகளை வாசித்து 2-வது இடம் பெற்றுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனை சேர்ந்த மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 756 நிமிடங்களில் 51 லட்சத்து 67 ஆயிரத்து 155 வார்த்தைகளை வாசித்து 3-வது இடம் பெற்றுள்ளனர். மாணவர்களை ஊக்குவித்த தன்னார்வலர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் ஆகியோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்