காரைக்குடி,
மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாண வர்கள் பறைவாசித்தல், பிறவகை நடனம், கிட்டார் வாசித்தல், கையெழுத்து, கட்டுரை போட்டி ஆகிய கலை இலக்கிய போட்டிகளிலும், சிலம்பம் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினர். இதில் பறை வாசித்தல் போட்டியில் மாணவி வாசுகி முதலிடமும், பிறவகை நடனம் போட்டியில் மாணவர் ராகுல் குழு அளவில் முதலிடமும், கிட்டார் வாசித்தல் போட்டியில் மாணவர் கிஷோர் முதலிடமும், கையெழுத்து மற்றும் கட்டுரை போட்டியில் மாணவி தொல்சியா முதலிடமும் பெற்றனர். இதேபோல் சிலம்பம் போட்டியில் மாணவிகள் பிரிவில் மாணவி தேசிகாவும், மாணவர் பிரிவில் மாணவர் விசாகன் ஆகியோர் முதலிடமும், நீச்சல் போட்டியில் மாணவர்கள் பாண்டியன், சூர்யா, சீனிவாசன் ஆகியோர் முதலிடமும் பெற்றனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரிட்டோ மற்றும் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.