10 மாணவர்கள் வீடு திரும்பினர்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காப்பக சிறுவர்களை சந்தித்து அமைச்சர் கயல்விழி நலம் விசாரித்தார். பின்னர் மதியம் 10 மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Update: 2022-10-10 18:40 GMT

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காப்பக சிறுவர்களை சந்தித்து அமைச்சர் கயல்விழி நலம் விசாரித்தார். பின்னர் மதியம் 10 மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அமைச்சர் நலம் விசாரித்தார்

திருப்பூர் திருமுருகன்பூண்டி ஸ்ரீவிவேகானந்த சேவாலயம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த 5-ந் தேதி உணவு சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மறுநாள் காலை 3 மாணவர்கள் பலியானார்கள். மீதம் உள்ள 11 மாணவர்கள் மற்றும் ஒரு காவலாளி ஆகியோர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அங்கு சிகிச்சையில் உள்ள சிறுவர்களிடம் நலம் விசாரித்தார். சிறுவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள், உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவர்களை தனித்தனியாக சந்தித்து விசாரித்தார். இந்த ஆய்வின்போது மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

10 மாணவர்கள் டிஸ்சார்ஜ்

சிகிச்சையில் இருந்த 11 மாணவர்களில் சிறுவன் குணாவுக்கு காய்ச்சல் இருப்பதால், குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 10 மாணவர்கள் நேற்று மதியம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் காவலாளி ஜெயராமனும் டிஸ்சார்ஜ் ஆனார்.

10 மாணவர்களில் 6 பேர் குடும்பத்தினருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் உள்ள 4 பேர் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உணவு மாதிரி பகுப்பாய்வு முடிவுக்கு பிறகே 3 மாணவர்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்