மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ராமநாதபுரம் அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாடத்தை கவனித்ததுடன், அங்கு ஆய்வும் மேற்கொண்டார்.

Update: 2022-07-22 14:53 GMT


ராமநாதபுரம் அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாடத்தை கவனித்ததுடன், அங்கு ஆய்வும் மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கலந்து கொண்டார்.

இதற்காக அவர், ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு சென்று கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.மடை கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்'் பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அங்கு ஆசிரியர்களிடம் பாடத்திட்டம் பற்றி கேட்டறிந்த அமைச்சரை, மாணவர்கள் தமிழில் வணக்கம் சொல்லி வரவேற்றனர்.

பின்னர் மாணவர்களோடு மாணவராக அமர்ந்து ஆசிரியை பாடம் நடத்துவதை அமைச்சர் கவனித்தார். பின்னர் அடுத்தடுத்த வகுப்பறைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு 8-ம் வகுப்பு மாணவர்களை சந்தித்து அவர்களின் பாடநோட்டுகளை ஆய்வு செய்து பாடம் தொடர்பான கேள்விகளை கேட்டார்.

உத்தரவு

மேலும் மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து கொண்டிருப்பதை கண்டு அவர்களுக்கு மேஜை, நாற்காலிகள் வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஸ்மார்ட் வகுப்பறையில் பாடங்கள் நடத்துவதையும் பார்வையிட்டதோடு, சமையல் அறை பகுதிக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்வாசல் வழியாக திடீர் வருகை

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அந்த வழியாக கீழக்கரை நோக்கி செல்வதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் அவரை வரவேற்பதற்காக பள்ளி வளாகத்தில் நின்றிருந்தனர். ஆனால் அந்த வழியாக செல்லும்போது பள்ளிக்குள் செல்லாமல் நேராக ஊருக்குள் சென்று விட்டார். இதனால் அமைச்சர் பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் வழக்கம்போல் பாடம் நடத்த தொடங்கினர்.

ஆனால் அமைச்சர் பின்வாசல் வழியாக வந்து திடீரென்று பள்ளிக்குள் வந்து, வகுப்பறைகளில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்