மதுபானத்தை கொட்டி போராட்டம்

அம்மாப்பேட்டையில் இயங்கும் 2 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு மதுபானத்தை கொட்டி பொதுமக்கள் போராட முயன்றனர்.

Update: 2022-07-11 20:28 GMT
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில் கிளை நூலகம், சந்தை, பேரூராட்சி அலுவலகம் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளால் மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே இங்குள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்து ஒரு மாதத்துக்குமேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மதுபானத்தை கொட்ட முயற்சி

இதையடுத்து நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மதுபானத்தை கொட்டி போராட்டம் நடத்த முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்து அவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், போராட்டம் நடத்தியவர்களை மரியாதை குறைவாக பேசியதாக கூறி அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தில்லைவனம், பேரூராட்சி கவுன்சிலர் முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்