கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 4-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த விவசாயிகள்- மேலும் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். அப்போது மேலும் ஒரு விவசாயி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். அப்போது மேலும் ஒரு விவசாயி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4-வது நாள் உண்ணாவிரதம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு தரப்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக பெருந்துறை- ஈரோடு ரோடு கூரபாளையம் பிரிவில் பந்தல் அமைத்து விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நேற்று 4-வது நாளாகவும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
இந்தநிலையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி நேரில் சென்று பார்த்து ஆதரவு தெரிவித்தார்.
மயங்கி விழுந்தார்
இதேபோல் மாலை 4 மணி அளவில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை சந்தித்து அவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இதற்கிடையே உண்ணாவிரதம் இருந்த அறச்சலூர் குடுமியாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி தனசேகர் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகே இருந்த விவசாயிகள் அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பரபரப்பு
கடந்த 2 நாட்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்த ஒரு விவசாயி மயங்கி விழுந்தார். நேற்று மேலும் ஒருவர் மயங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று ஏராளமான விவசாயிகள் உண்ணாவிரத பந்தலில் திரண்டு இருந்தனர்.