ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்யக்கோரி லாரி உரிமையாளர்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

Update: 2023-05-27 18:45 GMT

நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சம்மேளனத்தின் தலைவர் தனராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி, பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் லாரிகளுக்கு ஆன்லைனில் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் துணைத் தலைவர்கள் சின்னுசாமி, முருகேசன், சாத்தய்யா, சுப்பு, இணைச் செயலாளர்கள் செல்வராஜா, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் தனராஜ் கூறியதாவது:- லாரிகளுக்கு ஆன்லைனில் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பதை அரசு ரத்து செய்ய வேண்டும். சில நேரங்களில் லாரி ஒரு இடத்தில் இருக்க, அபராதம் வேறு இடத்தில் விதிக்கப்படுகிறது. ஆன்லைனில் வழக்குப்பதிவு செய்வதை முறைப்படுத்த வேண்டும். லாரியை நிறுத்தி உரிய விசாரணை நடத்திய பிறகு ஆன்லைனில் வழக்குப்பதிவு செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை. அதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். அதேபோல் மதுபோதையில் டிரைவர்கள் லாரியை ஓட்டினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அபராதத்தை கட்டிவிட்டு லாரியை எடுக்க சொல்கிறார்கள். அதனால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 6-ந் தேதி சென்னையில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு அளிக்க உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்