தள்ளுவண்டி கடைக்காரர்கள் பாத்திரங்களுடன் போராட்டம்

ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் பாத்திரங்களுடன் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-09 18:39 GMT

ராசிபுரம்

ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இவர்கள் மாலை நேரத்தில் சில்லி சிக்கன், வறுவல், டிபன் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இவர்களால் சந்தை நாட்களில் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாக கூறி நகராட்சி நிர்வாகம் கடைகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. இதனால் தள்ளுவண்டி கடைக்காரர்கள் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தட்டான்குட்டை ஏரிக்கு செல்லும் வழியில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் கடைகளை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என போலீசார் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில் ராசிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் அடுப்பு, வடை சட்டி உள்ளிட்ட பாத்திரங்களுடன் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது. இரவில் நடந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றி தராவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்