நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்; சீமானின் உருவபடத்தை தீயிட்டு கொளுத்தினர்

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சீமானின் உருவபடத்தை தீயிட்டு கொளுத்தினார்கள்.

Update: 2023-02-20 21:03 GMT

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சீமானின் உருவபடத்தை தீயிட்டு கொளுத்தினார்கள்.

சர்ச்சை பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி ஈரோடு திருநகர்காலனியில் கடந்த 13-ந் தேதி நடந்த நாம் தமிழர் கட்சியின் பிரசார கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சு தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும், நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிக்க சென்றபோது பல இடங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டது.

இந்தநிலையில் சீமானை கைது செய்ய வலியுறுத்தி அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மூலப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தீயிட்டு கொளுத்தினர்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சமுகநீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன் தலைமை தாங்கினார். தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன், தி.மு.க.வை சேர்ந்த விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினாா்கள்.

அப்போது சீமானின் உருவபடங்களை அவர்கள் கிழித்து கீழே போட்டு மிதித்தார்கள். மேலும், சீமானின் உருவபடத்தை ஒருவர் தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்தார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் ஆதிதிராவிடர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், ஈரோடு இடைத்தேர்தலில் அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் கனிஅமுதன், முதன்மை செயலாளர் புஞ்சை அரசன், மாவட்ட செயலாளர் அம்பேத்கர், தலித் விடுதலை இயக்க தலைவர் கருப்பையா, திராவிடர் தமிழர் கட்சி நிதி செயலாளர் சங்கர், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் பவுத்தன், ஆதித்தமிழர் கட்சி நிதி செயலாளர் விஸ்வை குமார் உள்பட ஏராளமாேனார் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்