விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-09-26 18:45 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

குடும்பத்துடன் தர்ணா

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த நத்தஅள்ளியை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது37). விவசாயியான இவர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை போராட்டத்தை கைவிடும் படி கேட்டு கொண்டனர். பின்னர் போலீசார் பச்சியப்பனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, பச்சியப்பனுக்கும், அவரது சகோதரர் முனிசாமிக்கும், பூர்வீக நிலத்தை அவரது தந்தை முனியப்பன் பிரித்து கொடுத்துள்ளார். இதற்கு பச்சியப்பன் தனி பட்டா, சிட்டா வழங்க கோரி நிலத்தை சர்வேயர் மூலம் அளக்க முயன்றுள்ளார். இதற்கு அதேபகுதியை சேர்ந்த காளியப்பன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால், இருவரின் நிலத்தை அளந்து, தனது நில எல்லையை வரையறுத்து தரும் படி பச்சியப்பன் வருவாய்த்துறையினரிடம் மனு கொடுத்தள்ளார். கலெக்டர், தாசில்தார் நிலத்தை அளந்து தர உத்தரவிட்டும், சர்வேயர் நிலத்தை அளந்து தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்து குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டதாக பச்சியப்பன் கூறினார். போலீசார் அவர்களிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கபடும் என, தெரிவித்தனர். இதையடுத்து பச்சியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மற்றொரு பெண் தர்ணா

இதேபோன்று சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த சாந்தி, அரசு தனக்கு வழங்கிய இலவச வீட்டுமனையை, தன்னிடம் இருந்து அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர் தர்ணாவை கைவிட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்