அண்ணன்-தம்பி மீது தாக்குதல்; உறவினர்கள் போராட்டம்

ராமியனஅள்ளியில் அண்ணன்-தம்பி மீது தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-05 16:37 GMT

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள வகுத்துப்பட்டியை சேர்ந்தவர் மோகேஷ் (வயது 16). இவன் ராமியனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். நேற்று மாலை மோகசை பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது அண்ணன் கலைஅமுதன் (18) ராமியனஅள்ளிக்கு சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த 3 பேர் பெண்களை நோட்டமிடுவதாக கூறி அண்ணன், தம்பியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் மோகேஷின் உறவினர்கள் ராமியனஅள்ளிக்கு வந்து மோகேஷ் மற்றும் அவரது அண்ணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா, எச்.கோபிநாதம்பட்டி கூட்ரோடு இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மோகேஷ் மற்றும் அவரது அண்ணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்